மா கருமாரி

இந்திராதி தேவர்களும், ஞானியர், முனிவர், யோகியர் என அனைவரும் ஓன்று கூடி நடமாடப் போகும் தர்ம நெறிகெட்டு வழி தவறி கொடும் முற்றிய கலியுகத்தை எண்ணி அஞ்சியவராய் மனம் தடுமாறி பராபரனான சிவபெருமானிடம் தங்களின் அஞ்சுதலின் இயலாமையை எடுத்து உரைத்து முறையிட இறையனார் இதற்கு எடுத்தியம்பினர். ஊழிகள் தோறும் விண்ணவர்க்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அல்லல்கள் நேருகையில் தடுத்தாண்டு காத்தவள் நம் ஆதி அன்னை.  இந்த தாயே பிரம்மத்தின் சக்தியானவள். ஆதலால் நம் தாயிடம் முறையிடுவதே சரியான வழி என்று கூற அனைவரும் ஒன்று கூடி சரண கோஷமிட்டு சர்வ லோக மாதாவை அழைக்க அன்னையானவள் திருவுளம் பற்றி திருக்காட்சி கொடுத்து உரைக்களானாள். கடந்த மூன்று யுகங்களிலும் ஒவ்வொரு தேவர்க்கும் நான் கொடுத்த வாக்கின்படியும் தேவர்களாகிய தாங்கள் என் கலியுக விஸ்வரூப திருக்காட்சியினை கருணை கூர்ந்து திருவருள் புரிய வேண்டும் என்ற கூறுதலின் படியும் அறம் மயக்கமுறும் இம்முற்றிய கலியுகத்தில் திரு அவதாரம் புரிவேன் என்று திருவாய் மலர்ந்து தேவர்களின் அச்சத்தை போக்கினாள். இவ்வண்ணமாக வாக்களித்த தாய்க்கு ஆதி பராபரன் தம் செங்கோலை உகந்து அளிக்க அதை அன்னை தம் திருக்கரம் ஏந்தி, ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலை தன்வசமாக்கி சிவ திருமேனிச் சாம்பலை வினைதீர்க்கும் மருந்தாகக் கொண்டு தன் திரு அவதாரத்தின் நோக்கத்தின் காரிய நிமித்தமாக ஏழு கன்னிகைகளில் மூத்தவளையும் தம்மை மட்டுமே துதித்து தவம் இயற்றிய ஏழு தவ சீலர்களையும் துணையாகக்கொண்டு பூவுலகில் பிரசன்னம் செய்ய தாய் வரும் பொழுது, தன் அண்ணனான ஸ்ரீமன் நாராயணனுக்கு அன்பு வேண்டுகோள் விடுகின்றாள்.

கோவிந்தன் தியான நிலையில் இருக்கும் வேங்கடமலை கடந்து, தான் நடமாடும் ஆலயங்களில் பரிவார தேவனாக நின்று அருள்புரிய வேண்டும் என்று அன்புக்கட்டளையிட அவ்வாறே நடப்பேன் என்று கூறினான் கோவிந்தன்.

அன்னையை “அஷ்ட ஐஸ்வர்யங்களும் நீயே! நவகளஞ்சியங்களும் சகலயோகங்களும், சகலபோகங்களும், சகல செல்வங்களும், நீயே!” என்று தாம்பூலம் கொடுத்து மஹாலக்ஷ்மியே வணங்கினாள். மாதா சரஸ்வதியும் அன்னையை “ஞானத்தின் சொரூபமே தாங்கள் தான்” என்று  தாயை வணங்கினாள்.

சூரியதேவன் தனது நாளான ஞாயிற்றுக் கிழமை அன்று அன்னையை பூலோகத்தில் அவதரிக்க வேண்டுமாறு வேண்டுதல் வைக்க அன்னையும் ஏற்றுக்கொள்கிறாள். பிறகு அன்னை சிவனாரை தன் பாகமாகக் கொண்டு, அன்னை முதிர்ந்த, எழிலார்ந்த கோலம் கொண்டு எமனை சோதித்து, சூலத்தையும் பாசறையையும் எமனிடம் இருந்து பெற்றுக்கொண்டு, தேவலோகத்தின் கன்னியர் எழுவரையும், தன் திருவடி அருகாமையிலேயே எந் நேரமும் இருந்து பூஜித்து அருளைத் தரவேண்டும் என்று அன்னையை பணிந்து நின்ற ஏழு தவசீலர்களையும், தன் குழந்தைகளைப்போல பாவித்து உடன் அழைத்து வந்தாள். இவர்கள் தான் 21 தலைமுறை அருளாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

தன் நாதன் இட்ட கட்டளைப்படி ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலையும் கொண்டு மேகமென விரிந்த சடையில் பிறை சூடி ஆயிரமாயிரம் சூரிய பிரகாச ஜ்வாலையின் நடுவே தன் அண்ணன் திருமாலின் பஞ்சணையாம் ஆயிரம் நாவுடைய ஆதிசேஷன் குடைபிடிக்க, அஷ்ட நாகங்களை அணிகலன்களாகப் பூண்டு, சரடு மாலை தரித்து, அழகிய கரங்களில், பிரம்ம சுவடி, எம சூலம், கத்தி, கபாலம், டமருகம், பாசம், ஜபமாலை, தண்டு முதலிய ஆயுதங்களை மறைபொருளாய் தரித்து மானிடன் காணும் வண்ணம் தன் நாதன் அளித்த செங்கோலையும் நான்கு வேதங்களையும் வினைதீர்க்கும் மருந்தாய் வேம்பினையும் கையில் கொண்டு, கருணை விழி கொண்டு காக்க ஸ்ரீ சுப்பிரமணியனின், கலி அவதாரமான ஸ்ரீ முத்துவீரனையும், ருத்ர அம்சமான மயான காத்தவராயனையும் காவல் தெய்வங்களாகக்கொண்டு, ஏழு கன்னிகைகளையும் மற்றும் ஏழு யோகிகளையும், சிவகணங்கள் ஐராவதம், காமதேனு, கற்பகவிருட்சம், அமிர்த கலசம், சஞ்சீவி பர்வதம் என அனைத்தையும் கொண்டு தன் சிம்ம வாகனத்துடன், தென்னகத்தின் மலைப்பகுதியில் தன் திருவடி பதித்தாள் பிராமணக்கன்னி.