ஆதி புராணம்

பகவதி ஷேத்திரம்

அன்னை ஆதிபராசக்தி அருள்புரியும் புண்ணிய ஷேத்திரங்கள் பல உள்ளன. வடகிழக்கில் அசாம் மாநிலத்தில் கௌஹாத்தியில் தாய், ஸ்ரீ காமாக்யா தேவி என்னும் நாமத்தில் அருள் புரிகின்றாள்.  ஆனந்த வாசினியாய் அன்னை அருள்மழை பொழிகின்றாள்.  இது சாக்த தேசங்களில், மகா யோனி பீடம் அமைந்த ஷேத்திரம் ஆகும். மேற்குவங்க மாநிலத்தில், கொல்கத்தாவில் அன்னை மஹாகாளியாக அருள் ஆட்சிபுரிகின்றாள். ஜம்மு காஷ்மீரில் அன்னை வைஷ்ணவியாக கோடான கோடி பக்தர்களுக்கு அருள் மழை பொழிகின்றாள். அன்னை வைஷ்ணவி தேவி மஹாசரஸ்வதி, மஹாகாளி, மஹாலக்ஷ்மி சொரூபங்களாய் அருளாட்சி புரிகின்றாள். இவ்வாறு தாய், கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் என்னும் ஷேத்திரத்தில் மூகாம்பிகை என்னும் திருநாமத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றாள். இச்ஷேத்திரத்தில் தான் அன்னையவள் ஆதிசங்கரருக்கு சொர்ணலிங்கமாக, சிவபெருமானுடன் கலந்து காட்சி கொடுத்து அமர்ந்தாள். கேரள மலைப்பிரதேசங்களில் அன்னையவள் ஒவ்வொரு ஸ்தலங்களிலும் பகவதியாய் அருளாட்சி புரிகின்றாள். இவ்வாறு அம்பாள் அருளாட்சி செய்யும் ஷேத்திரங்கள் சாக்த தேசங்களாகவும்,  பகவதி ஷேத்திரங்களாகவும் அழைக்கப்படுகின்றன.

அன்னையவள், இச்க்ஷேத்திரங்களில் ஆட்சி புரிய முதன்முதலில் இப்புண்ணிய பாரதத்தில் தன் திருவடியை பதித்த ஆரண்ய ஷேத்திரமே திருவடிசூலம் என்னும் மஹாக்ஷேத்திரம் ஆகும்.

அன்னை சர்வலோக தேவர்கள், சித்தர்கள், யோகியர்கள், ஞானியர்கள் ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்க, இம்முற்றிய கலிகாலத்தில், தம் அருள் பாலகன் அககுகயோகி மதுரைமுத்து சுவாமிகளுல் ஒன்றெனகலந்து அனைவர்க்கும் ஒன்றெனவாகி மஹாசக்தி சொரூபமாய் ஜோதிர்மயமாகி மஹாஜோதியாக காட்சியளித்து அண்டமும் பிண்டமும் அளவிடமுடியாத மகா அற்புதத்திருவடி காட்டி அருள் திருஞான சூலத்தை நாட்டி அற்புதத்திரு கண்களால் கருணை மழை பொழிந்து அருளாட்சி புரிகின்ற இத்திவ்யஷேத்திரமே, திருவடிசூலம் என்னும் சர்வசக்தி  பீடமாகும்.

மதுரதிருவடி - மாத இதழ்

அங்கு இங்கு அலைந்து திரிந்து அல்லல்படும் மானிடர்களே இதோ, நம் அன்னையின் திருவடி!

நம்மீது கருணை கொண்டு, திருவடி சரணத்தைக்காட்டி நம்மை அரவணைத்து காக்கும் நம் அன்புக்குரிய தாய் மஹாசக்தியின் கருணை தான் என்னவோ! ஆதிநாராயணனும், பிரம்மனுமே அடிமுடி காணா திருவடியாய், ஆதிபராபரன் நின்றது திரு அண்ணாமலை அங்கு திருவடி காட்சி கிடைக்கவில்லை.

ஆதிநாராயணன், நாராயணகிரி என்னும் வராக ஷேத்ரம் என்னும் திருமலையில் ஆனந்தநிலையில் நின்று அருள்பாலிக்கிறார். அவரைக்காண பக்தர்களான நாமும், ஏழு மலை கடந்து மண்டி இட்டு, சரணத்தை நாடினால் அனுகிரகம் புரிகின்றார். அம்மை அப்பனையே புறம் தள்ளி ஆண்டியாய் நின்ற நம் பழனி ஆண்டவர், அடியவர்களுக்கு குன்றின்மீது நின்று சரணத்தைக்காட்டுகின்றார், திருவடி காட்சி அளித்து அருள்பாலிக்கின்றார். ஐந்து மலைகளுக்கு அதிபதியாய் விளங்குகின்ற ஐயப்பன் அன்னைக்குப்புலிப்பால் கொடுத்து வினைதீர்த்து ஐந்து மலைகளை கடந்து அமர்ந்து அருட்ஜோதியாய், தன் தந்தைக்கு திருகாட்சி அளித்து ஆனந்தயோக நித்திரையில் அமர்ந்தது சபரிமலை. பிரம்மச்சரிய விரதம் இருந்து இருமுடிதாங்கி, ஐயனின் திருவடியைக்காண வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவ்வாறெல்லாம் இறைபொருளாகிய அன்னையின் ஆதிநாதனும், அண்ணனும், பிள்ளைகளும் தங்களின் திருவடிசரணத்தை காணுவதற்கு அரியதாக்கி அருள்புரிய, நம் அன்னையோ அவளே கருணைகூர்ந்து, தன் அடியவர்களுக்கு அற்புதத்திருவடிகாட்டி நம்மை குழந்தைகளாக அரவணைத்துக்காக்கும் மகாசக்தி, தம் திருவடியை பதித்து ஞானத்தின் திரிசூலத்தை நாட்டி, அருள்புரிகிறாள் திருவடிசூலம் என்னும் திவ்யஷேத்திரத்தில். (இக்கருணை கொண்ட தாய் யார்.. காண்போமாக)

திருவடி

தேவி புராணம்

பிரம்மத்தின் சொரூபிணியாய், பிரம்மம் தானே பெண்ணாகி இத்தரணியை காக்க தாமே வந்தவள் அன்னை மகாசக்தி. ஹரனுக்கே தாயாக நின்றவள் அன்னை மகாசக்தி. அவள் தான் பிரம்மத்தின் கன்னிகையாக விளங்குகின்றாள். முனிவர்கள், யோகியர்கள், ஞானிகள், தேவர்கள் ஆகிய அனைவருடைய அந்தர ஆத்மாவில் துதிக்கின்ற மனோண்மணியாக விளங்கி அந்தரி, அந்தரக்கன்னிகை என்று திரு பெயர் கொண்டாள். வானளாவி நின்று ஒவ்வொரு லோகத்தையும் படைத்து, வானவி, ஆகாய வாகினி, ஆகாய கன்னி என்றுப் போற்றப்படுகின்றாள். அத்தாயே தேவர்கள் முனிவர்கள், அனைவருக்கும் வேதங்களைக்கொண்டு, தம் ஆண் தத்துவமான இறைவன் பராபரனை தவக்கோலம் கொண்டு, விசாலாட்சி என்னும் திரு நாமத்தில் பூஜித்த ஸ்தலமே வாரணாசி என்னும் காசி மகாஷேத்திரம் ஆகும்.

மகிஷாசூரவதம், சண்டமுண்டவதங்களை முடித்துக்கொண்டு, பிரம்மஹத்தி தோஷம் நீங்க காளி, காமாட்சியாக தவம் புரிந்து, தர்ம நீதியில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அறவழியை எடுத்துக்கூற 32 அறங்களை கொண்டு தம் இறையனாரை பூஜித்த ஸ்தலமே காஞ்சி காம கோட்டம் என்று சொல்லப்படுகின்ற காஞ்சி மாநகரம் என்கிற காஞ்சிபுரம்.

பிறகு ஷத்திரிய தர்மத்தை ஆண்கள் மட்டுமே நிலைநாட்ட முடியும், பெண்களால் இயலாது என்கிற சூழலில், அம்பாள் சராசரி பெண்ணாக அவதரித்து அனைவரையும் போரில் தோல்வி அடையவைத்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி உலக மக்களை காத்து, சிவபெருமானின் திருக்காட்சியைக்கண்டு, திருக்கல்யாணம் புரிந்து நான்மாடக்கூடலில் மீனாட்சி என்னும் திருநாமத்தில் ஆட்சி புரிந்தாள்.

அத்தாயே இம்முற்றிய கலியுகத்தில் தர்மம் நெறிக்கெட்டு செல்வதை அறிந்த தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, கரிய நாகமாக மாறி, ஆட்கொள்ளும் தத்துவமாய் சிவத்திருமேனி சாம்பலை வினைதீர்க்கும் மருந்தாகக்கொண்டு தன் திருஅவதாரத்தின் நோக்கத்தின் காரிய நிமித்தமாக ஏழு கன்னிகைகளில் மூத்தவளையும், தம்மை மட்டுமே துதித்து தவம் இயற்றிய ஏழு தவ சீலர்களையும் துணையாகக்கொண்டு, நிர்குணவதியாய், மகா ஜோதி சொரூபமாய் விளங்கி அன்னையவள் உதித்ததால் கரியமாரி, கருமாரி என்று பெயர் பெற்றாள். வாக்கு தேவதையாக நடம் புரிந்தாள் அவளே இம்மகாசக்தி. (இம் மகாசக்தியின் விஸ்வரூப திருக்காட்சியின் காரணம் என்ன! காண்போமாக)