திருவேற்காடு

பூவுலகில் கரிய நாகமாகத் தோன்றி, ஒரு பெண்மணியை வெள்ளிக்கிழமை அன்று தீண்டி இறக்கச் செய்து பின்பு ஞாயிற்றுக்கிழமை அன்று மயான எரிசுடலையில் அப்பெண்சடலத்திலிருந்து வாயிலாக எழுகிறாள். அதைக்கண்டு வியந்த மக்கள், மயானசுடலையில் பயத்தில் அடிக்க வரும்பொழுது அன்னையவள் கருணையுடன் வாக்கிட்டாள் நான் தர்மத்தின் தாயாக உலகை காக்க வந்த கலியுக நாயகி கரிமாரி என்றாள். அப்பெண்மணி தன்னால் பிறக்கப்பெற்ற ஏழு கன்னிகைகளில் மூத்தகன்னிகை ஆவாள். அப்பெண்ணின் பிறப்பு, இறப்பு, அன்னையின் திருஅவதாரத்தின் காரணத்தை கொண்டது என்று வாக்கிட்டாள்.

அன்னையவள் கரிய நாகமாகத்தோன்றி தீண்டி ஆட்கொள்ளும் தத்துவமாகி, ருத்ர மயான எரிசுடலையில் வயோதிகம் பெருக்கி, அருட்பெருஞ்ஜோதி வடிவிலான தலைமுறை தத்துவமாய் உலகின் நிலையாமையை எடுத்துரைத்து சகலமும் தனக்குள் ஒடுக்கம் என்பதை உணர்த்த தர்மத்தின் வாக்கு தேவதையாய் இக்கலியுகத்தில் கரிமாரி எனும் திருநாமத்தில் திருஅவதாரம் புரிந்தாள். முன்னர் யுகமதில் தம் குமாரனுக்கு அசுர படைகளை மாய்க்க வேல் படை கொடுத்து, வேதநாயகனுடன் வேதநாயகியாய் நின்ற ஸ்தலமும், குறுமுனி அகத்தியனுக்கு திருமணக்காட்சி கொடுத்து அம்முனி தம் கலியின் வாக்கு சக்தியாக வரும் நன்னாளை எண்ணி தவமியற்ற குண்டலினி ஜந்து தத்துவமாய் கும்பமாரியாக வழிபட்டுக்கொண்டிருந்த வடவேதாரண்யம் என்னும் திருத்தலத்திற்கு தாம் உதித்த சிவ சாம்பல் சுடலையை விடுத்து முன்சென்று அருளாளர் பாளையக் குமாரனை பின்நடத்தி திருவடிப்பதித்து அறத்தின் நாயகியாய் அருள்மழை பொழிந்தாள்.

அடுத்து தம் ஏழு தவசீலர்களில் ஒருவரான அருளாளர் தம்புவை தமக்குடையவனாக நிர்ணயித்து ஓர் அரிய திருவிளையாடலை அரங்கேற்றினாள். பூவை வையாபுரி குடும்பத்தின் தலைவி இறந்துவிட, அக்குடும்பத்தினர் அனைவரும் அன்னையை சரண்புக, தாயவள் தம் அருட்கருணையால் அவ்வம்மையாரை திரும்பவும் உயிர்பெறச் செய்து, தனக்கென உரைக்க ஓர் குருபீட ஸ்தலம் கண்டாள். இதுவே இன்று பிரசித்திபெற்ற “திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தானம்” என சிறந்தோங்கி விளங்குகிறது.

இக்குருபீடத்தில் ஸ்ரீபரமானந்தம் சுவாமிகள், ஸ்ரீ புண்ணியகோட்டி சுவாமிகள் எனும் அருளாளர்கள் வழியாகவும் அருட்கடாட்சத் திருவுருவினாலும், வினை என்று நாடியவரின் வினை அகற்றி, நல்லறம் புகட்டிய தாய், முன்னர் வானவர்க்கு தாம் அளித்த திருவாக்கின் காலம் கனிந்தது போலும், தம் வாக்கால், மனதில் திருவுருவை உலகம் உய்யவேண்டி, ஒரு பெருமகனாரை மகனாகத்தேர்ந்தேடுத்தாள். அவரை திரு.புண்ணியகோட்டி சுவாமிகள் எனும் மகானின் அர்தாங்கினியின் திருவயிற்றில் 3-ம் குமாரனாக வைகாசி பௌர்ணமி நன்னாளில் அனுஷ நட்சத்திரத்தில் அவதரிக்கச் செய்தாள். தானே அருள்நாக வடிவம் தாங்கி தன் மகனை ஆரத்தழுவி “தம் அருளுக்கு முழுதும் உரியவன்” என திருவாய் மலர்ந்தருளினாள். அவரை தன் அருட்திரு உருவமாகவும், தன்மகா பிரம்மாண்ட விஸ்வரூபத்தை திருஉருவாக்க காரண காரிய நிமித்தமாக வைத்து ஆதிமுதற்காலத்தில் தமக்கென்று தம்பொற்திருவடி பதித்து, நிர்ணயித்த ஷேத்திரத்தில் அண்டசராசரங்களும், விண்ணும், மண்ணும் எங்கும் நிறைந்த வண்ணம், பராபரனாம் ஆதிநாதனின் மகாபிரம்மாண்ட பரர்வொளி ஜோதிர்மயத்தில், மகாப்பேரொளியில் அன்னையானவள் ஒன்றனவாகி அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகியாய் ஏழு மலைகளினால் சூழப்பெற்ற இந்த அடர்ந்த அழகிய ஆனந்த வனத்தின் நடுவே சகலலோகங்களும் ஆர்ப்பரித்த வண்ணம், 51 சக்தி பீடங்களில் விழுந்த அவயங்கள் யாவும் ஒன்றிணைக்க பெற்று ஆதிமகாசக்தியாய், தேவர், மூவர், முனிவர், யோகியர், ஞானியர், சித்தர் என மறைபொருளாகத் தவமியற்றிக் கொண்டிருப்பவர்களின் பொருட்டு, தம் அருளாளருக்கு (திரு.புண்ணியகோட்டி மதுரை முத்துசுவாமிகள்) அருட்கருணை கொண்டு அற்புத திருவடிகாட்டி அருள் ஞான திரிசூலத்தை நாட்டி, பிரம்மாண்ட நாயகியாய் விஸ்வரூப திருக்காட்சி கொடுத்து, அன்னையவள் அமர்ந்த திருத்தலமே ‘திருவடிசூலம்’ என்னும் மகா ஷேத்திரமாகும்.