சுவாமிகள்

அகில உலகமும் தன் நாமத்தை அறியவும் பல்லாயிரம் ஆண்டுகளாக அவளின் விஸ்வரூப சொரூபத்தைக்காண தவமேற்கொண்டிருக்கும் தேவர், மூவர், சித்தர், யோகியர், ஞானியர்களுக்காகவும் தன் ஆதி ஷேத்திரமாகிய ஏழு மலைகளால் சூழப்பெற்று அடர்ந்த காடுகளும் சுனைகளுமாகிய அழகிய சோலைவனத்தின் நடுவே தம் ஆறாம் தலைமுறை அருளாளர் அககுக யோகி புண்ணியகோட்டி மதுரைமுத்து சுவாமிகளை காரிய நிமித்தமாக வைத்து, தன் அழகிய பொற்திருவடியைக் காட்டி ஆண் பெண் தத்துவமாக காட்சி அளித்து விண்ணிற்கும் மண்ணிற்கும் ஓங்கி சுடர்விடும் மாபெரும் தீப்பிழம்பாகி அதில் அய்யன் அன்னையிடம் ஒன்றிணைந்து ஏகமாகி அம்மாபெரும் ஜோதியில் பிரம்மாண்ட சொரூபமாக தன் விஸ்வரூப காட்சி கொடுத்தாள்.

தான் காட்சி கொடுத்த அவ்விடத்திலேயே தமக்கு அவ்விதமே மகாதிருமேனியாக அமைத்து அனைத்து மாந்தர்களையும் காணச்செய்து அருள்பெறுவதற்குரிய வழியை செய்ய வேண்டும் என்று தன் சித்த குகயோகி புண்ணியகோட்டி மதுரைமுத்து சுவாமிகளுக்கு கட்டளையிட அதன்படி அவளின் திருமேனிக்காக பல இடங்களில் அலைந்து திரிய அவளே தன் திரிசூலத்தை ஊன்றி இவ்விடத்தில் பல லட்ச ஆண்டுகளாக என் திருமேனிக்காக சுயம்பாக உள்ளேன் என்று எடுத்துரைக்க அவ்வாறாகவே 22 அடி ஆழத்தில் அவளின் சுயம்பு திருமேனியை எடுத்து அவள் கொடுத்த காட்சியின் படியும் அவள் எடுத்துரைத்த அருளின் படியும் நியமனத்துடன் 51 சக்தி பீடங்களின் மொத்த தத்துவப்பொருளாக 51 அடி உயரத்தில் அவளின் அகண்ட அழகிய திருமேனி அமைக்கப் பெற்றாள்.

அத்தாய் எடுத்துரைத்த அடிப்படையில் ஆதியில் என் திருவடியைப் பதித்து என் திரிசூலத்தை ஊன்றியதும் முனிவர்களும், யோகிகளும், சனத்குமாரரும் அகண்ட என் சிம்மம் ஒருமலையாகவும், ஐராவதம் என்று சொல்லப்படுகின்ற யானையை ஒருமலையாகவும், சஞ்சீவி ஆகர்சனம் கொண்ட மலை ஒரு மலையாகவும், வாயுபுத்திர ஹனுமான் என்னை வணங்க நின்றிருக்கும் ஒரு மலையாகவும், ஏழு கன்னிகளும், ஏழு முனிவர்களும் தவ சேஷ்டர்கள் இருக்கும் ஓர் மலையாகவும், அக்னி பக்கத்தில் மகாதீப மலையாகவும், தன் திருநேத்திரத்தின் எதிரே தன் திருவடி பதித்த மலையாகவும், ஆக சப்த மலைகளால் சூழப்பெற்று பலகாலம் மனிதர்கள் குடியமர்த்தி வாழாததும், நாதனாம் சிவத்துணை ஞானமே வடிவாகி அமர்ந்து அருள் பாலிப்பதும் தான் பிரம்மாண்ட ஈஸ்வரி என்ற பெயர் பெற்றதும், ஞானக் குழந்தை சம்பந்தனுக்கு இறைவனுடன் தான் காட்சி கொடுத்ததும், தான் பசுவாகி நின்று சிவபூஜை செய்து வளம் படைத்த அறம் வளர்த்ததும், வேகவதி ஆறு சுந்தரவாகியாகி உள்ளே ஓடும் இடத்தில் தாம் உமக்கு என் நாதனுடன் திருவடி பதித்து திரிசூலம் நாட்டிய இடம் என்று நிதர்சனத்தில் காட்டியது. பின் அம்மையானவள் அடியவருக்கு முன்பாக நாகமாக சென்று அத்திவ்ய ஷேத்திரத்தை கண்ணுறச் செய்து அங்கிருக்கும் புற்றுக்குள் மறைந்தாள்.
அன்னையின் கட்டளைப்படி அவள் திருவடி பணிந்து இம்மகா திரு உருவத்தை அவள் அருளால் அகண்ட ஆரண்யமும், ஏழு மலைகளும் சூழ்ந்த சோலை வனத்தில் ஆவணி திங்கள் 26-ம் நாள் (11-9-2008) சித்த யோகம் சுக்லபட்சம் துவாதசி திதி திருவோணம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் சுவாமிகளின் பெரு முயற்சியுடன், அவளின் மெய்யன்பர்களின் உதவியோடு அவளின் விஸ்வரூப திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இத்திருத்தலம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு வட்டத்தில் திருவடிசூலம் என்னும் பெயரில் அமைந்துள்ளது. செங்கற்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் சாலையில் 9 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து 2.கி.மீ. உள்ளே சுற்றிலும் மலைகளும், மரங்களும் நிறைந்த சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் சூழ்ந்த வனத்தின் நடுவே அன்னையின் மகா திருஉருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலய கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.