திருவடிசூலம்

அன்னையவள், முதன்முதலில் இப்புண்ணிய பாரதத்தில் தன் திருவடியைப் பதித்த ஆரண்ய ஷேத்திரமே திருவடிசூலம் என்னும் மஹாக்ஷேத்திரம் ஆகும். அன்னை, சர்வலோக தேவர்கள், சித்தர்கள், யோகியர்கள், ஞானியர்கள் ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்க, இம்முற்றிய கலிகாலத்தில், தம் அருள் பாலகன் அககுக யோகி மதுரைமுத்து சுவாமிகளுடன் ஒன்றெனகலந்து அனைவர்க்கும் ஒன்றெனவாகி மஹாசக்தி சொரூபமாய் ஜோதிர்மயமாகி மஹாஜோதியாக காட்சியளித்து அண்டமும் பிண்டமும் அளவிடமுடியாத மகா அற்புதத்திருவடிகாட்டி, அருள் திரு ஞான சூலத்தை நாட்டி அற்புதத்திரு கண்களால் கருணை மழை பொழிந்து அருளாட்சி புரிகின்ற இத்திவ்யஷேத்திரமே, திருவடிசூலம் என்னும் சர்வசக்தி பீடமாகும்.

 

திரிசூலம்

சூலவழிபாடு என்பது சாக்தத்தின் முதல் வழிபாடு ஆகும். திரிசூலம் என்பது மூவிலைவேல் என்று போற்றப்படுகின்றது சிவனின் கையில் இருப்பதும் திரிசூலம் அன்னையின் கையில் இருப்பதும் திரிசூலம். அதனால்தான் நம் முன்னோர்கள் சூலத்தையே அன்னையின் திரு உருவமாக வழிபட்டனர்.

ஞானமே ஒன்றென விளங்குகின்ற அன்னையின் திருசூலம் உயர்ந்தோங்கி நிற்க தாய், தந்தை எனும் தத்துவமாய் விளங்கும் திருவடியின் கீழ் 3 சக்திகள் 4 வேதங்கள் 5 மூலங்கள் 6 மதங்கள் 7 மாதாக்கள் 8 அஷ்டதிக்பாலகர்கள் 9 கோள்கள் மற்றும் விஸ்வகர்மா , சேஷ்ட பகவதி, ஆதிசேஷன் பூதேவி இவ்வனைத்தும் அந்த அந்த தேவர்களின் சூட்சும எந்திரங்களைக் கொண்டு அருட்பிரதிஷ்டைசெய்ப்பட்டுள்ளது.

சிம்மம்

அன்னையின் வாகனமாகிய சிம்மம், தர்மத்தின் சின்னமாக விளங்குகிறது. சிம்மத்தை வணங்கினால், ராஜபோக வாழ்வு, அரசின் பதவி உயர்வு, பணி நிரந்தரம் கிட்டும், தர்ம சிந்தனைகள் வளரும். சிவாலயத்தில் நந்தியை வணங்கினால் சிவனை வணங்கியதாகப்போற்றப்படுகிறது  அதேபோல் அம்மன் ஆலயத்தில் சிம்மத்தை வணங்கினால் அதன்மேல் வீற்றிருக்கும் அம்பிகையை வணங்கியதற்குச் சமமாகக்கருதப்படுகிறது.

கமல விநாயகர்

கற்பக தருவாக விளங்குகின்ற கமலவினாயகரை வழிபடுதலினால் அனைத்து விக்னங்களும் விலகிவிடும்.

பாலாலயம்

மூலாலயத்தில் உள்ள அன்னைக்குச் சமமான போக மூர்த்தி என்று துதிக்கப்படுகின்ற அன்னை மூலத்தின் உட்பொருளாக விளங்குகிறாள். அனைத்திற்கும் மூலமாக விளங்குபவள் நமக்கு வேண்டிய போக சக்திகளை எல்லாம் அளிப்பவள் இவ்வன்னையை வணங்கினால் நன்மை, போக, செல்வ வளம் தருவாள்.

திருவிளக்கு

ஆதியில் அன்னை கலியுகத்தில் மகா ருத்ரனின் எரி சுடலையில் (கரிய நாகமாக) தோன்றி, தீண்டி, ஆட்கொள்ளும் தத்துவத்தினளாய், ஊனை நீக்கி உள்ளொளி பெருக்கி மகா ஜோதிர் மயமாக காட்கியளித்தாள். நான் தர்மத்தின் தாயாக உலகை காக்க வந்த கலியுக நாயகி கரிமாரி என்றாள். அதனால் அன்னையை ஜோதிர் சொரூபமாக வணங்குகின்றோம்.

அன்னையின் திருவுருவம் பொருந்திய இத்திருவிளக்கு மிகுந்த சிறப்புடையது. இத்திருவிளக்கில் தன் குழந்தைகளான வினாயகர், முருகன் வணங்கிய வண்ணமும், தேவர்களும் சூழ்ந்து நிற்க, பிரம்மா, சரஸ்வதி, விஷ்ணு, மகாலட்சுமி, சூரியன், சந்திரன், சங்கநிதி, பத்மநிதி மற்றும் அன்னையின் விளக்கிற்கு கீழாக தர்மத்தின் சின்னமாக சிம்மம் இருக்க தர்மதேவியாக அன்னையவள் விளக்கின் நடுநாயமாக விளங்கி காட்சி தருகிறாள்.

அதனால் அங்கு வரும் பக்தர்கள், இத்திருவிளக்கை வணங்கி, பசுநெய்யை விளக்கில் இட்டு, தாமரைமலர் மற்றும் ரூபாய் நாணயங்களை (வேண்டுமானால் வெள்ளி, தங்க காசுகள் வைக்கலாம்) விளக்குமுன் வைத்து பூஜித்து பின் அந்த தாமரை மலரையும், ரூபாய் நாணயங்களையும் தங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து பால் நெய் வேத்தியம் செய்து பூஜை செய்தபின் அக்காசுகளை தம் இரும்பு பெட்டகத்தில் வைக்க, தரித்திரனும் பெரும் செல்வந்தன் ஆவான். சகல செல்வங்களுடன் ஜோதிர்மயமான பிரகாச வாழ்வு அமையும்.

சப்த சைலஜ ஸ்ரீ வாரு வேங்கடேச பெருமாள்

கோவிந்தன் தியானநிலையில் இருக்கும் வேங்கடமலை கடந்து தான் நடமாடும் ஆலயங்களில் பரிவார தேவனாக நின்று அருள் புரிய வேண்டும் என்று அன்னை அன்புக்கட்டளை இட அவ்வாறே நடப்பேன் என்று கூறினான் கோவிந்தன். அறம் பொருள் இன்பம் அளிக்க பரந்தமானின் கலியுக அவதாரமாகிய வேங்கடெச பெருமாள் நாமத்தில் நின்று ஸ்ரீமன் நாரயனன் அருள் புரிந்து ரக்ஷிக்கின்றார். இங்கு ஸ்ரீ வாரு வேங்கடெச பெருமாளை , ஏழு மலைகள் சூழ்ந்து நிற்பதால் இச் சேத்திரம் சப்த சைலஜ மத்ய பீடம் எனப்படுகின்றது.

விஷ்வரூபம்

அன்னை இங்கு மகாசக்தியாக தர்மத்தின் தேவதையாக அழகிய அற்புதத்திருவடியை பொற்றாமரையில் பதித்திருக்க கற்றையெனும் சடைமுடியுடன் பிறைசூடி ஆயிரமாயிரம் கோடி சூரியனின் ஒளிக்கு ஒப்பாக முக வதனத்தில் வலது சூரியன், இடது சந்திரன், நெற்றில் அக்னி எனும் முன்று  திருக்கண்களை உடையவளாக காட்சி தருகின்றாள்.

அனைத்தும் தாமே என்று பொன் முறுவல் பூத்து தம் குழந்தைகளை வா வா என்று அரவணைத்து தம் அருகாமையில் அழைப்பது போல் உள்ளது. காத்தல், அருளள், ஆக்கல், அழித்தல், மறைத்தல் எனும் ஐந்து இயக்கங்களையும் தம் பத்து கரங்களினால் டமருகம், சூலம், தண்டம், பாசம், சுவடி, ஜெபமாலை, கத்தி, கபாலம் எனும் இயக்கத்தின் ஆயுதங்களை தம் திருக்கரங்களால் தாங்கி இவ்வுலகத்தை இயக்குகிறாள். அபயம், வரதம் என்னும் இரு கரங்களால் அனைத்தையும் அளித்து மகாலட்சுமி, மகாவிஷ்ணு எனும் தத்துவங்களாகவும், அன்னை விளங்குகின்றாள். ஆதலால் பஞ்ச சக்தியாகவும், சப்த மாதர்களாகவும் அஷ்ட, நவ, தசமகா சக்திகளாகவும் விளங்குகிறாள். 16 சோடாதி சக்தியாகவும், 6 X 6 = 36  தத்துவங்களாகவும், 43 முக்கோணங்களில் விளங்கும் சக்திகளுக்கும் ஆதார பிந்துவாகவும் விளங்கும் மகா பிரம்மத்தின் சக்தியே நம் அன்னை கரிமாரி ஆவாள் அத்தாயின் பேரருள் பெற்று பெருமிதம் கொள்வோம். இவ்வருட் திருக்காட்சியை நமக்களித்த அன்னையின் புதல்வன் புண்ணியக்கோட்டி மதுரைமுத்து சுவாமிகள் திருவடிகளை வணங்கி அருள் வாழ்வு பெறுவோம்.  51 அக்ரஹரவாளியாகவும், 51 சக்திப்பீடங்களில் விழுந்த அவயங்கள் யாவும் ஒன்றிணைக்கப் பெற்று, இக்கலியுகத்தில் நம் கர்ம வினை நீக்கி நம்மை கடைத்தேற்ற வந்த கலியுக தெய்வம் கரிமாரி தாயையும், அவள் கருணை திருவுருவான நம் அருளாளர் திரு. புண்ணியக்கோட்டி மதுரைமுத்து சுவாமிகளையும் இனியும் தாமதிக்காமல், “என்னே யாம் பெற்ற பேறு!” என உணர்ந்து முழுவதுவமாக சரண் அடைவோம்! விரைந்து வாருங்கள்..!